பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று 100-வது நாள் விழாவையொட்டி 50 ரூபாய்க்கு சேலையும், 10 ரூபாய்க்கு வேட்டியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதையறிந்த பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காலை முதலே அந்த கடை முன்பு திரண்டனர். தொடர்ந்து கடை திறந்த பின்பு நெருக்கியடித்துக் கொண்டு, சமூக இடைவெளியை மறந்து கடைக்குள் ஓடினர்.கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், சமூக இடைவெளியை மறந்து அதிக அளவில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் கடையில் கூடி இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அந்த ஜவுளிக் கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, விதிமுறையை மீறி கடையில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் கட்டுப்பாட்டு விதிமுறையை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், தொற்று அதிகரித்து வரும் வேளையில் கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.