• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

புயலாக மாற வாய்ப்பில்லை-சென்னை வானிலை ஆய்வு மையம்

ByA.Tamilselvan

Nov 9, 2022

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, வரும் 12-ம் தேதி வடமேற்கு திசையில், தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று (9-ம் தேதி) முதல் 13-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். வரும் 12-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்த பகுதியில் பலத்த மழையும் பெய்யக்கூடும். எனவே, மீனவர்கள் 12-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்த வரையில் நாளை (10-ம் தேதி) நகரின் ஒரு சில பகுதியில் கனமழையும், 11, 12-ம் தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், 13-ம் தேதி ஒரு சில பகுதியில் கனமழையும் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை(நவ.9-ம் தேதி) தமிழகத்தில் 23.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 24.3 செ.மீட்டரை விட இரண்டு சதவிகிதம் குறைவு. சென்னையில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாகும்” எனத் தெரிவித்தார்.