• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் : செந்தில் பாலாஜி!!

ByA.Tamilselvan

Oct 27, 2022

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்திருக்கக் கூடாது, நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று கூறினார். அதற்காக மக்களை அச்சுறுத்தக்கூடாது, தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் சம்பவம் நடந்தாலும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் தீபாவாளி பண்டிகையை கொண்டாடினர் என்று குறிப்பிட்டார்.
கோவை சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை தொடங்கும் முன்பே சில தகவல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அவருக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன? என்று கேள்வி எழுப்பினார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்? கோவை சம்பவம் தொடர்பாக மாநிலம் கடந்தும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என தெரிவித்தார். என்.ஐ.ஏ. முதலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கோவை சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு கோவை சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே தெரியுமா? அல்லது அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று விரும்பினாரா? என என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.