கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், “போ சாமி தெக்கல!” எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, மாவட்டம் சின்ன தடாகம் அருகே புகழ்பெற்ற அனுபவி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது. மலை மீது அமைந்து உள்ள இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், சுவாமிக்கு அன்னதானம் மற்றும் உணவு சமைப்பதற்காகச் சிலர் அரிசி, பருப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களைச் சுமந்தபடி படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரெனப் படிக்கட்டின் குறுக்கே வந்து நின்று கொண்டது.
சுமைகளுடன் வந்த பக்தர்களைக் கண்ட அந்த ஒற்றை யானை, ஆக்ரோஷமான தோரணையில் அவர்களை நோக்கி நகர முயற்சித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் படிக்கட்டுகளிலேயே அஞ்சியபடி உறைந்து நின்றனர்.

நீண்ட நேரமாக அந்த யானை படிக்கட்டை விட்டு நகர மறுத்ததால், மேலே கோயிலுக்குச் செல்ல வழியின்றி பக்தர்கள் கடும் தவிப்பிற்கு உள்ளாகினர்.
அப்போது கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர் சற்றும் தைரியத்தைக் கைவிடாமல், யானையைப் பார்த்து, “போ சாமி தெக்கல (தெற்கு திசையை நோக்கி)… எங்களுக்கு வழி விடு சாமி!” என மிகவும் மரியாதையுடனும் உருக்கமாகவும் வேண்டுகோள் விடுத்தார்.
பக்தரின் அந்த வேண்டுகோளைக் கேட்டது போல, அந்த யானையும் மெதுவாகப் படிக்கட்டுகளை விட்டு விலகித் தெற்குப் பக்க வனப்பகுதியை நோக்கி நடந்து சென்றது.

இந்த அசாத்தியமான மற்றும் நெகிழ்ச்சிகரமான காட்சியை அங்கு இருந்த மற்றொரு பக்தர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.
அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் மலையேற வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.




