• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன் – வைரமுத்து

கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. 1980ம் ஆண்டு நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் கடந்த 40 ஆண்டுகளில், 7500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். இந்தியாவில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிக அதிகபட்சமாக 7 முறை தேசிய விருது வென்ற ஒரே கவிஞர், வைரமுத்து தான். இவர் தற்போது நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு ராயல்டியை பெற்றுத்தரும் IPRS எனும் ( இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் ) அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பாடலாசிரியர்கள் கவிஞர் வைரமுத்து , விவேகா, மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அவர் பேசுகையில், கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும் , நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது . வெளிநாடுகளில் 100 பாட்டு எழுதினால் பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவு வாங்கி விட முடியும்.

ஆனால் 7,500 பாடல் எழுதிவிட்டேன் . இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் இருப்போரால் 25 ஆண்டுகள் இருக்க முடியும், அதிலும் 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும் . கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர்.

இவர்கள்தான் உருவாக்குபவர்கள், மூலமானவர்கள். எனவே தான் இவர்களுக்கு ராயல்டி வேண்டும் என்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி. சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர். அரசு, நிறுவனம், நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகின்றனர்.

குன்றின்மீது நின்று கூவினாலும் ஊடகம் மூலம் சென்றால்தான் அது ஊர் சென்று சேரும். சமூக ஊடகங்களால் செய்திகள் குறித்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அச்சு ஊடகங்கள் அளவு கூட பிற ஊடகங்களை நம்புவதில்லை என பலர் கூறுகின்றனர். நானும் அச்சு ஊடகங்களை அதிகம் நம்புகிறேன். தொலைக்காட்சி ஊடகங்களும் நம்பகத்தன்மை கொண்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என வைரமுத்து கேட்டுக் கொண்டார்.