• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாசி வீதிகளில் அசைந்தாடிய தேர் – பரவசத்தில் மீனாட்சி பக்தர்கள்..!

Byகுமார்

Apr 15, 2022

மதுரையின் மாசி வீதிகளில் அம்மன் மற்றும் சுவாமி தேர்கள் அசைந்தாடி உலா வந்ததை கண்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோசத்துடன் வணங்கி மகிழ்ந்தனர்.


மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்றும் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.


தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரே வாகனத்தில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினார்கள். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார்.


சப்பரங்களில் விநாயகரும் சுப்பிரமணியரும் வலம் வந்தனர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து சிறிய தேரும் புறப்பட்டது. தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்னே சென்றன. இவற்றை தொடர்ந்து சிறிய சப்பரங்கள் சென்றன. முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகனும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வந்தது.


இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் மதுரை நகர வீதிகளான கீழ மாசி வீதி,தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். இன்று பிற்பகல் கீழ மாசி வீதியில் உள்ள தேரடியை தேர்கள் வந்து அடையும். மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்களை தரிசித்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்து வணங்கினர்.
இத்தேர் திருவிழாவினைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் தென் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவினை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர். தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.


முன்னதாக இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் தேர் புறப்படத் துவங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்ச் சக்கரத்தில் ஏற்பட்ட சின்ன பழுது காரணமாக முக்கால் மணி நேரம் தாமதமாக 7.15 மணி அளவில் தேர்கள் புறப்பட்டன.