கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது. மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நாளில் கோவில்களில் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று காய். கனி பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல பெரியவர்கள். சிறியவர்களுக்கு கைநீட்டம் எனப்படும் பணமும் வழங்குவர்.சித்திரை விஷூ நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இன்று அதிகாலை கோவிலில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 7 மணி வரை கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் தந்திரிகளும், மேல்சாந்திகளும் கைதிட்டம் வழங்கினர்.
கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதலே பம்பை முதல் சன்னிதானம் வரை இருமுடி கட்டி வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இன்று காலையில் அவர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். கனிகாணும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்கள் வெளியே வந்தனர்.சித்திரை விஷூ பண்டிகைக்காக 10-ந் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை வருகிற 18-ந் தேதி அடைக்கப்படுகிறது.அதன்பின்பு மே மாத பூஜைகளுக்காக மே 14-ந்தேதி திறக்கப்படுகிறது. வழக்கமான மாத பூஜைகள் முடிந்த பின்னர் மே மாதம் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.