தேனி மாவட்டம் சின்னமனூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள் பிச்சைமணி – முத்துச்செல்வி தம்பதியினர். இவர்களுக்குச் சொந்தமான மனையிடத்தை அளப்பதில் சந்தேகம் இருந்ததால், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில், நிலத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
கோட்டாட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, சின்னமனூர் நகர நில அளவையர் ஜெகன்குமார் (35) மற்றும் அவரது உதவியாளர் மணிமாறன் (35) ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அளவீட்டுப் பணியை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பத் தயாரானபோது, அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள், “இங்கு நிலத்தை அளக்கக்கூடாது” என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

“நாங்கள் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில்தான் பணி செய்கிறோம்” என்று அளவையர் விளக்கியும், அதை ஏற்க மறுத்த அவர்கள், நில அளவையர் ஜெகன்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற உதவியாளர் மணிமாறனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



