• Sat. Nov 7th, 2026

செயற்கை நுண்ணறிவு குறித்து டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி சிறப்புரை..,

BySeenu

Nov 7, 2026

கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர் தின உரையாடலில் செயற்கை நுண்ணறிவு குறித்து டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி சிறப்புரை ஆற்றினார்

கங்கா மருத்துவமனையின் நிறுவனர் தின உரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஹைதராபாத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் AIG மருத்துவமனைகளின் தலைவர் பத்ம விபூஷன் டாக்டர் டி. நாகேஷ்வர் ரெட்டி பங்கேற்று, ‘நமது நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற தலைப்பில் 12-வது நிறுவனர் தின உரையை நிகழ்த்தினார்.

1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்கா மருத்துவமனை, தரமான மருத்துவச் சிகிச்சையை மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எலும்பியல், பிளாஸ்டிக் மற்றும் நுண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இம்மருத்துவமனை, மருத்துவச் சேவை, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நிறுவனர்களின் தொலைநோக்குப் பார்வை, உழைப்பு மற்றும் சமூக அக்கறையைப் போற்றும் வகையில் 2013-ஆம் ஆண்டு முதல் நிறுவனர் தின உரை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை டாக்டர் தேவி ஷெட்டி, நந்தன் நிலேகனி, என். சந்திரசேகரன், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளனர்.

இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினரான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி, குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவம், எண்டோஸ்கோபி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறைகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். மருத்துவத் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சைப் பயிற்சி அளித்துள்ளார்.