தேனி மாவட்டம் கம்பம் இலாஹி பள்ளிவாசலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜமாத்துல் உலமா சபையின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த முஸ்லிம் பெருமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவருடன் ஒன்றிணைந்து கொண்டாடுவது எனது வழக்கம். ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதையும், அவர்களுக்கு பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவிப்பதையும் எனது வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
எனது மூதாதையர்கள் காலம் தொட்டே இஸ்லாமிய மக்களுடன் குடும்ப உறவு முறையோடும், அன்போடும், சகோதரத்துவத்தோடும் பழகி வருகிறோன்
அந்த நல்ல உறவையும் பாரம்பரியத்தையும் நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மனிதநேயம் ஒன்றுதான்.
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும், இன்ப துன்பங்களில் பங்கேற்பதும் தான் உண்மையான ஒற்றுமையாகும். பண்டிகைகள் என்பது வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல; அன்பையும், பாசத்தையும், சகோதரத்துவத்தையும் பரிமாறிக் கொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களாகும்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ வேண்டும். நமது பகுதியில் மத நல்லிணக்கமும், அமைதியும், ஒற்றுமையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இந்த அன்பும் சகோதரத்துவமும் தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும்.
அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா பேசினார்.