தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கு வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் ரூ.38 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் மற்றும் 132 ஸ்வீட் பாக்ஸ்களை தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் இருந்து போடி மற்றும் தேனி பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்களுக்கு தீபாவளி இனாம் மற்றும் இனிப்புப் பெட்டிகள் வழங்குவதற்காக காரில் கொண்டு வரப்படுவதாக தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், காரில் இருந்த ஓட்டல் மேலாளர் உள்பட இரண்டு பேரிடம் இருந்து கணக்கில் வராததாகக் கூறப்படும் ரூ.38 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் மற்றும் 132 ஸ்வீட் பாக்ஸ்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பணம் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்களைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காரில் வந்த இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலர்களுக்கு இனாம் வழங்குவதற்காகப் பணம் மற்றும் இனிப்புப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டதா? இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.