• Thu. Nov 5th, 2026

பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காவல்துறையினர்..,

ByAjmalkhan saleemraja

Nov 5, 2026

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி சுப்பன் செட்டித் தெரு, கடற்கரை நாடார் தெரு, பழைய பேருந்து நிலையம் மற்றும் மதுரை, பெரியகுளம் செல்லும் சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் புத்தாடைகள் மற்றும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை பறிப்பு, பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், கடைவீதிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது பணம், நகை உள்ளிட்ட உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கூட்ட நெரிசலில் தவறவிடாமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி கடைவீதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.