தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் ஒட்டுமொத்த பகுதியும் இருளில் மூழ்குகிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் சிறிது காற்று அடித்தாலே தொடர் மின்வெட்டு ஏற்பட்டுவிடுகிறது.
5 நிமிடம் மழை பெய்தாலே இரவு முழுவதும் கரண்ட் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. குழந்தைகள், முதியவர்கள் புழுக்கம், கொசு தொல்லையால் தூங்க முடியாமல் தவிப்பு.

எதிர்காலம் இருட்டில் ?முக்கியமாக தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கை. மின்சாரம் இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சம் எப்படி கிடைக்கும்
இதனால் வீடுகளில் மின்விசிறி இன்றி குழந்தைகள் தூங்க முடியாமலும், மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட முடியாமலும், குடிநீர் மோட்டார் இயக்க முடியாமலும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்கள் தெரு விளக்கு வெளிச்சத்திலும், செல்போன் டார்ச் வெளிச்சத்திலும் படிக்கும் அவலம் தொடர்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட தேனி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் உடனடியாக தலையிட்டு சின்னமனூர் பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தொங்கும் மின்கம்பிகளை சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சின்னமனூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.



