• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரிவசூலர் கைது..,

BySeenu

Aug 19, 2026

கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரத்தில் மினிதிரையரங்கு கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள 2 பேரிடம் 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார்.

அது காலியிடம் என்பதால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு, காலியாக கிடக்கும் அந்த இடத்துக்காக மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். இதற்காக பிரகாஷ், சுந்தராபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் வரிவசூலர் (பில் கலெக்டர்) ஆக பணியாற்றி வரும் யமுனாதேவி(59)யை அணுகினார். அவர் அந்த காலியிடத்துக்கு வரி செய்து கொடுக்க ரூ.45 ஆயிரம் தனக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பேரத்துக்கு பின்னர் ரூ.40 ஆயிரம் தர முடிவு செய்யப்பட்டது.

காலியிடத்துக்கு வரி செலுத்த லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் நேற்று ( ஆக.18) புகார் அளித்தார். யமுனாதேவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீஸார், ரசாயணம் தடவிய ரூபாய் தாள்களை பிரகாஷிடம் கொடுத்து யமுனாதேவியிடம் கொடுக்குமாறு அனுப்பினர். இதையடுத்து யமுனாதேவிக்கு தொடர்பு கொண்டு பேசிய பிரகாஷ், தான் பணம் கொண்டு வருவதாக கூறினார்.

அதற்கு அவர் அலுவலகத்துக்கு வர வேண்டாம், அருகே உள்ள பேக்கரிக்கு வருமாறு கூறினார். அதன்படி, நேற்று (ஆக.18) மதியம் பிரகாஷ் அந்த பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த வரிவசூலர் யமுனாதேவியை சந்தித்து தன்னிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார். அதை யமுனாதேவி வாங்கினார். அப்போது அங்கு மறைந்திரு்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக யமுனாதேவியை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேலை செய்து வரும் அலுவலகம், அவருடைய வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.