• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத அவலம்!

ByKalamegam Viswanathan

Aug 11, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருப்பட்டி, நாச்சிகுளம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பும் பேருந்துகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தை அடையும்போது, பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் சிரமம் ஏற்படுகிறது.

குறிப்பாக, ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் சென்று வருவதற்கு போதிய இடவசதி இல்லாததால், அண்ணா நிலையம், துவரிமான் வழியாக பெரியார் நிலையம் செல்லும் பேருந்துகள், நகரி வழித்தட பேருந்துகள், மதுரை ஆரப்பாளையம் பேருந்துகள் மற்றும் வாடிப்பட்டி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாமல், இடையிலேயே திருப்பி அந்தந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்து நிலையத்தை நம்பியுள்ள பயணிகள், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளிலிருந்து சோழவந்தான் வரும் பொதுமக்கள், பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சர்வீஸ் சாலையை அகலப்படுத்த கோரிக்கை

பேருந்துகள் தடையின்றி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில், பாலத்தின் மற்றொரு புறம் உள்ள சர்வீஸ் சாலையை பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்ற வகையில் அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த பணியை உடனடியாக மேற்கொள்வது சாத்தியமில்லாத சூழ்நிலையில், தற்போது பேருந்துகள் வெளியேறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் சாலையையாவது, ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் சென்று வரக்கூடிய வகையில் விரிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேருந்து நிலையம் இருக்கிறது; ஆனால் பேருந்துகள் முழுமையாக வந்து செல்ல முடியாத நிலை நீடிப்பது பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கான அணுகுச்சாலை பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு கண்டு, அனைத்து வழித்தட பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்று பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது….