• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளின் கைகளில் மதுக்கோப்பைகள்…

ByKalamegam Viswanathan

Jul 3, 2026

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே குழந்தைகளுக்கு தந்தையே மது ஊற்றிக் கொடுத்து அருந்தச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய பெற்றோர்களே, மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. வளரும் குழந்தைகளுக்கு மதுவை அறிமுகப்படுத்துவது அவர்களின் உடல் மற்றும் மனநலனை கடுமையாக பாதிக்கும் செயலாகவும், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். வைரலான வீடியோ தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது குடும்பத்தினரும் சமூகமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு என்பதால், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.