தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் வைரமும் முத்துக்களும் போல் தனித்துவம் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.
கவிஞர், பாடலாசிரியர், கவியரங்க நாயகர், சிந்தனையாளர் என எந்த களத்தில் பார்த்தாலும் அவரின் ஆளுமை தமிழ் மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்தும்.
திரைப்படங்களில் பாடல் எழுதுவது ஒரு தொழில் மட்டுமல்ல; கதையின் உணர்ச்சியை கவிதையாக மாற்றும் கலை. அந்தக் கலையில் புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் வைரமுத்து.
திரைப்படங்களில் கதையோடு கலந்த பாடல்களை எழுதி, படம் பார்க்கும் அனுபவத்தை பரவசமாக்கியவர்.ஒரு காலத்தில் வானொலியில் அவர் பாடல் ஒலித்தால், அதை மீண்டும் மீண்டும் கேட்க ஒலிநாடாவில் பதிவு செய்து கேட்கும் அளவுக்கு இவரது பாடல்கள்கள் காதலிக்கப்பட்டது, இன்றைய கணினி காலத்திலும் அந்த பாடல்களில் இருந்து இதயம் விலகவில்லை.
“இது ஒரு பொன் மாலைப் பொழுது…” என்ற பாடல் தான் வைரமுத்துவின் முதல் திரைப்படப் பாடல்.
அதில் வரும் வரிகள்:
“வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்”
இந்த வரிகள் சாதாரண கற்பனை அல்ல.
வானத்தை போதிமரமாகக் காணும் பார்வை, தெருவோர மனிதனுக்குக் கூட புத்தரின் ஞானம் கிடைக்கலாம் என்ற மனிதநேய நம்பிக்கையை உருவாக்குகிறது. இது தான் திராவிட சிந்தனையின் அடிப்படை — மனிதன் உயர முடியும் என்ற நம்பிக்கை.
வைரமுத்துவின் கவிதை உலகில் கற்பனைக்கும் மணம் உண்டு:
“பூவை அள்ளிப்
பூவை கையில் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்.”
பூவை பறித்து கொடுப்பது இயல்பு.
எடுத்துக் கொடுப்பதும் உண்டு பூவை அள்ளிக் கொடுப்பவர் யார்? யாரேனும் யாரேனும் கண்டதுண்டா பூவை அள்ளித்தரும் போது?பூவை அள்ளி பூவை கையில் கொடுப்பது கவிஞரின் கற்பனை வளம் அந்த தமிழ் மணம் இன்றும் என்றும் கவிஞரின் கையில் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

“விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”
இந்த வரிகளில் காதல் மட்டுமில்லை.
ஜாதி, மதம், மொழி, இன எல்லைகளை கடந்த மனித உறவின் உண்மை இருக்கிறது.
இது திராவிட இயக்கம் நூற்றாண்டு காலம் வலியுறுத்திய ஜாதி ஒழிப்பின் சமத்துவத்தின் கவிதை வடிவம்.
இயற்கையோடு கலந்த காதல்
“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்.”
இது காதலை மட்டுமல்ல; வாழ்க்கையின் பருவங்களோடு இணைந்த உறவைச் சொல்கிறது.
தமிழ் உணர்வை தாலாட்டிய வரிகள்
வைரமுத்துவின் பாடல்கள் பல தலைமுறைகளின் நினைவாக வாழ்கின்றன.
“பூங்கதவே தாழ்திறவாய்…”
“ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை…”
“ஆத்துக்குள்ள நேத்து உன்னை நினைச்சேன்
வெக்கம் நிறம் போக மஞ்சக் குளிச்சேன்.”
இவை கிராமத்து வாழ்க்கையின் மண்வாசனையைக் கொண்ட வரிகள்.
கற்பனையின் உச்சம்
வைரமுத்துவின் சில வரிகள் கவிதை உலகின் புதுமையை காட்டுகின்றன:
“முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததினால் அழுகிறதோ அது மழையோ?”
மேகம் கூட முகவரி தேடும் மனிதனைப் போல அலைகிறது என்ற கற்பனை. இயற்கையை மனிதனாக்கி இயல்பு வாழ்க்கையில் அலைய விடும் கற்பனை கைதட்டல்கள் மிகுந்த இடம்.
“எனது கதையை எழுத மறுக்கும் என் பேனா?”இது ஒரு கவிஞனின் உள்ளம் பேசும் வரி.
“ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு?”
நீரோட்டத்தில் கூட காதலைக் காணும் பார்வை.
“மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்…”
இந்த வரிகள் காதலின் உணர்ச்சியையும் மனித மனத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றன.
“நான் தேடி வந்த ஒரு
கோடை நிலவு நீதானா
மனக் கண்ணில் நின்று
பல கவிதை தந்த மகள் நீதானா?”
இந்த வரிகளில் காதலும் கவிதையும் ஒன்றாகின்றன.
திராவிட இயக்கம் மனித சமத்துவம், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தியது.
அந்த சிந்தனைகளை நேரடி அரசியல் மொழியில் மட்டுமல்லாமல், கவிதை மொழியில் மக்களிடம் கொண்டு சென்றவர் வைரமுத்து.
அவரது பல பாடல்களில்:
மனித சமத்துவம்
உழைக்கும் மனிதனின் வாழ்க்கை
சமூக உணர்வு
என்ற பல பரிமாணங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் திரைப்படப் பாடல்களுக்கு புதிய முகம் கொடுத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து.
புதிய கற்பனைகள், புதிய சொற்சேர்க்கைகள், புதிய பார்வைகள் மூலம் அவர் எழுதிய பாடல்கள் காலத்தை கடந்தும் வாழ்கின்றன.
கலைஞர் ஒருமுறை கூறியது போல
“ஒவ்வொரு வரியும் ஐவரி” என்ற பாராட்டுக்கு உரியவை வைரமுத்துவின் பாடல்கள்.
தொன்மை தமிழரின் கள்ளிக்காட்டு வாழ்வியலை இதிகாசமாகவும்; கருவாச்சியை காவியமாகவும் படைக்கும் ஆற்றலும்,உழைக்கும் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் கவிஞரின் பாங்கும் – பண்பும் தமிழரின் நெஞ்சம் மகிழ்ந்த பாராட்டைப் பெறுகிறது.
எளிய மக்கள் உழைக்கும் விவசாயிகள் தொழிலாளர்கள் நாட்டின் எதிர்காலமாம் குழந்தைகள் மாணவர் பெண்கள் – இது இவரது படைப்புகளின் கதை மாந்தர்கள்.
மகா கவியின் வாழ்வை கவிதை நடையில் கதையாக சொன்ன போதிலும் புரட்சிக் கவிஞர் பாவேந்தரை உள்வாங்கியவர்.
சமூகம் இலக்கியம் வரலாறு என இவரது சிந்தனைகள் விரியாத திசைகள் இல்லை.இவருக்கு எல்லா திசைகளும் கிழக்கு தான்.
இவரது படைப்புகள் மோட்சம் தரும் எனச் சொல்லும் மந்திரங்கள் அல்ல இதயத்தை இயங்கவைக்கும் சுவாசம்.
திரை இசை பாடல்களில் தீக்குச்சி கொழுத்தி பிற்போக்குத்தனங்களை கொளுத்திய கருப்பு நெருப்பு வைரமுத்து.
“சின்னச் சின்ன ஆசைகளும்
சிறகடிக்கும் ஆசையானால்
இந்த பூமியும் சுற்றிவரும் அளவுதான்’என்ற நம்பிக்கை வார்த்தை வானம் எட்ட தி(த)ரையில் விதைத்த கவிஞர் வைரமுத்து.




