கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா என்ற பெண் திருமண பந்தத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்த கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவம் குறித்து போடி நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் கணவருக்கு உயிரைக் கொல்லும் விஷத்தை உணவில் கலந்து கொலை செய்த மனைவி ஹனீஸ் பாத்திமா, மற்றும் அவருடன் திருமண பந்தத்தில் மீறிய உறவில் இருந்த ஜெயபாண்டியன் உள்ளிட்ட இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதோடு, தலா பத்தாயிரம் ரூபாய் கட்டவும், மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் வழங்கி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.



