அக்கரைப்பட்டியில் முதல் கட்டமாக 250 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி தலைமை வகிகித்தார். ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 250 பயனாளிகளுக்கு முதல்கட்டமாக இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும், அக்கரைப்பட்டியில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையினையும், எஸ்.பாறைப்பட்டி அருகே, கே.ராமநாதபுரத்தில் ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினையும், வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கும்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களையும் என, மொத்தம் ரூ.52.10 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பெண்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஆண்டுதோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து கடனுதவிகளை வழங்கி வருகிறார். இக்கடனுதவிகளை பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழுக்களாகச் சேர்ந்து சிறுதொழில்கள் ஆரம்பித்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்பகுதியில் 150 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சித் தலைவர் கோ.பழனிவேல், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன், ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் (மேற்கு) ராமன் (கிழக்கு) முருகேசன் (தெற்கு) ராஜேந்திரன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பத்மாவதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



