பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மாணவர்கள் கலந்துரையாடும் COFFEE WITH COLLECTOR என்ற நிகழ்வு நடத்தப்படுகின்றது.

கடந்த 13.01.2026 அன்று நடைபெற்ற COFFEE WITH COLLECTOR நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க ஆசையாக உள்ளதாக தெரிவித்தனர்.
மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கல்மரப்பூங்கா, காரை புதைபடிவ பூங்கா, பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அம்மோனைட்ஸ் மையம், அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் செல்லக்கூடிய ஒரு நாள் கல்விச்சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில், இன்று முதற்கட்டமாக மேலமாத்தூர், அசூர், ஒதியம் மற்றும் குன்னம் ஆண்கள், பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலக்கூடிய 125 மாணவர்கள், 107 மாணவிகள் என மொத்தம் 232 மாணவ மாணவிகளை ஒரு நாள் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, மேலமாத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் இன்று (06.02.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர், சாத்தனூர் கல்மரப்பூங்காவில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த சிறப்புகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவால் காரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதைபடிவ பூங்கா மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மோனைட்ஸ் அருங்காட்சியங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே விளக்கினார்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்லுயிர்களின் படிமங்களின் நமது பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் கிடைப்பது குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிடுகின்றனர். நமது மண்ணின் முக்கியத்துவத்தை, வரலாற்றுத் தொண்மைகளை மாணவச் செல்வங்களாகிய நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கல்மரப்பூங்காவில் உள்ள அருங்காட்சியகத்தினையும், கல்மரத்தையும் மாணவ மாணவிகளுடன் பார்வையிட்டார். மேலும், சிவசங்கர் அறக்கட்டளை மூலம் மாணவ மாணவிகளுக்கான குறிப்பேடு, பேனா, அந்தந்த பகுதிகள் குறித்த விளக்க துண்டு பிரசுரங்கள், மதிய உணவு உள்ளிட்டவை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இதுபோன்ற அடுத்தடுத்து மற்ற பள்ளிகளுக்கும் ஒரு நாள் கல்வி சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.










