2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம்.

இயேசு பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட காலகட்டத்தில் யூதமதத்தில் பல பிரிவுகள் தோன்றியிருந்தன. யூத மதத்தின் அதிகார மட்டத்தில் யூத ஆட்சியாளர்களுக்குச் சமமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டு உயர் வர்க்கப் பிரிவினர் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள். மதத்தின் பெயரால் இவர்கள் பொதுமக்களை மிரட்டி கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். பிறப்பால் யூதரான இயேசு, யூத மதப் பழக்க வழக்கங்களையும், ஒழுங்கீனங்களையும் எதிர்த்து விமர்சித்தார்.
இதனால் இயேசுவின் போதனைகள் தங்களது செயல்பாடுகளுக்கும் வாழ்க்கைமுறைக்கும் எதிரானதாக இருப்பதை உணர்ந்து அவர் மீது பரிசேயர், மற்றும் சதுசேயர் கடுஞ்சினம் கொண்டனர். இயேசுவை போதனைகளால் சாமான்ய யூத மக்கள் அவரை “மேசியா’( மக்களை மீட்டுக் காக்க வரும் வலிமை மிக்க அரசன்) என்று அழைத்தனர். இதற்கு பரிசேயர், மற்றும் சதுசேயர் ஆட்சேபணை தெரிவித்தார்கள்.
யூதம் கற்பித்த கீழ்மைகளுக்கு எதிர்நிலையில் நின்று அவற்றுக்கு மேலானதைப் இயேசு போதித்தார். மதகுருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள், அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்றது யூத மதம்.
ஆனால் தன் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு.
“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்பது யூத மதத்தின் கடுமையான அணுகுமுறை. “எதிரிக்கும் அன்பு செய் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு”. இது இயேசுவின் அன்புமுறை. “பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர் யூதர்கள்.“உங்களில் பாவம் செய்யாதவன் அவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்று கூறி மன்னிப்பை போதித்தார் இயேசு. யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் கீழானவை என்று தீண்டாமையை போதித்தது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தி அனைவரும் சமம் என்றார் இயேசு.
இதனை சகிக்காத யூதமத குருக்கள் இயேசுவை கொல்ல சதி செய்தனர். பாஸ்கா பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்தபின் கெதசமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்யச் சென்றார். அப்போது இயேசுவைப் பிடிக்க யூதமத குருக்கள் ஆசாரியர்களை அழைத்துச் சென்றனர். இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான். பின்னர் அவர்கள் இயேசுவுக்கு எதிரான பொய்சாட்சிகளை தயார் செய்து மறுநாள் அவரை ஏரோது மன்னரிடம் கொண்டு சென்றனர். ஆனால் ஏரோது அரசரோ இவர்மீது குற்றம் ஒன்றும் காணப்படவில்லை என கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார்.
ஜனங்கள் முன் இயேசு தம்மை ராஜாவாகக் காட்டிக்கொண்டு வந்ததாக யூத பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மீது தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பிலாத்துவும், கைதியாக நின்ற இயேசுவால் ரோமாபுரிக்கு எந்த அபாயமும் இல்லை என்பதை அறிந்துகொண்டு “இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்றார். ஆனால் அவர் தேசத்தையே கலகத்திற் குள்ளாக்குவதாக யூதர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து, இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது என தண்ணீரில் கைகளை கழுவி, இவரை உங்கள் இஷ்டபடி செய்யுங்கள் எனக்கூறி பிலாத்து இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூத மதகுருக்கள் அதிகபட்ச தண்டனையாக இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து தலையில் முள்முடி சூட்டி சிலுவையை சுமக்கச்செய்து கொல்கொதா என்ற இடத்திலுள்ள கபாலஸ்தலம் என்ற இடத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.
இயேசு மானிடருக்காக கொடூரமான மரணத்தை ஏற்றுக்கொண்ட தினம். சீர்திருத்த ஞானத்தைப் போதித்து ஒரு தலைசிறந்த குருவாக விளங்கி, பாவங்களை மன்னித்து நோய்களிலிருந்து மக்களை விடுவித்து வாழ்வளித்தவர் இறைமகன் இயேசு. அவர் அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் நினைவுகூறும் நாள் புனித வெள்ளி. இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்நாளில் கிறிஸ்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.





