• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய பூஜை

ByP.Kavitha Kumar

Feb 20, 2025

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப்ரவரி 26-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், இரண்டாம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், மூன்றாம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், நான்காம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.

இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 12 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், நான்காம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன.

இதேபோல் மீனாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்த சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில் உள்ளிட்ட உபகோயில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை பிப்ரவரி 26-ம் தேதி மாலைக்குள் மீனாட்சி அம்மன் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரசு உத்தரவின்படி, மகா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு ஆடி வீதிகளில் பிப்ரவரி 26-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.