
கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது மஹா சிவராத்திரி பெருவிழாபிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ம் தேதி மஹா சிவராத்திரிவிழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது. இந்த ஆன்மீக சாத்தியத்தை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஈஷாவில் 31-வது மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள் பிப்ரவரி 26-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன மேலும் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.
மேலும், மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மேலும், 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது .
இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களைப் பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்” ” என்று கூறினார். அவருடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
