• Wed. Apr 23rd, 2025

தேர்தலில் அறிவித்த 90 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ByP.Kavitha Kumar

Feb 19, 2025

சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னை புளியந்தோப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது “வடசென்னை தொகுதிக்காக சட்டமன்றத்தில் அறிவித்தபோது ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வளர்ச்சி திட்டம் உருவாக்க பட இருக்கிறது என அறிவித்திருந்தேன். இப்போது ஆயிரம் கோடியானது ரூ.6400 கோடியாக உயர்த்தப்பட்டு அந்தப் பணிகள் எல்லாம் இன்றைக்கு நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதே போல் நகர்புற வாழ்விட மேலாண்மை வாரியத்தின் சார்பில் 5059 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் 4400க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு வட சென்னையில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருக்க வேண்டும்.

முதன் முதலில் குடிசை மாற்று வாரிய திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. நகர்புற வாழ்விட மேலாண்மை திட்டத்தின் பேரில் பல்வேறு வீடுகள் கட்டித் தருவது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக சிதைந்து பாழடைந்த வீடுகளை கண்டறிந்து அங்கு தங்கியிருப்பவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்க மறந்தவர்களுக்கும், வாக்களிக்க தவறியவர்களுக்கும் உண்டான ஆட்சி என்று சொன்னேன். இந்த ஆட்சிக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே என்று மக்கள் வருந்தப்பட வேண்டும் என்ற நிலையில் என்னுடைய ஆட்சி இருக்கும் என்றேன். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். இதில் தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

புதுமைப்பெண் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதலில் சொல்லவில்லை. கல்லூரிக்கு செல்லும் ஏழை மாணவவிகள் வசதியின்மையால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடுவதால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறோம். அதனால்தான் அவர்கள் அப்பா என்று அழைக்கிறார்கள். திட்டங்களை நிறைவேற்றி பிறகு தான் மக்களிடையே ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. மாணவிகளுக்கு மட்டும் தான் திட்டமா என்று மாணவர்கள் கேட்டார்கள் அவர்களுக்கு தமிழ் புதல்வன் என்று திட்டத்தை தொடங்கி மாத மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. நீதி கட்சி ஆட்சியில் இருக்கும்போது மத்திய உணவு கொண்டுவரப்பட்டது. எம்ஜிஆர் சத்து உணவாக இருக்க வேண்டும் என அறிவித்தார். கருணாநிதி அது உண்மையான சத்து உணவாக இருக்க வேண்டும் என்று சத்துணவில் முட்டை வழங்கினார். நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் உண்மையிலேயே சத்துள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தேன். இந்த திட்டங்கள் எல்லாம் தேர்தல் வாக்குறுதி இல்லை” என தெரிவித்துள்ளார்.