• Sun. Feb 9th, 2025

சவுதி அரேபியாவில் பயங்கர விபத்து – 9 இந்தியர்கள் பலி !

ByIyamadurai

Jan 30, 2025

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜீஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இந்தியாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறோம். இந்த விபத்து குறித்து தகவலை தெரிந்து கொள்வதற்காக உதவி எண்களை வெளியிட்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விபத்து குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் இந்திய தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் தேவையான முழு உதவிகளை செய்து கொடுப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.