


அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது பயணிகள் விமானம் அதன் மீது பயங்கரமாக மோதியது. அப்போது விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்துள்ளனர். இந்த விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் ஆற்றில் விழுந்தன.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து மீட்பு படகுகள் மற்றும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை உட்பட பல்வேறு முகமைகளின் ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்து
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி விமான நிலையத்துக்கு வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தையடுத்து அவசர நடவடிக்கையாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 800-679-8215 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. கூடுதல் தொலைபேசி எண்களுக்கு அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் news.aa.com ஐப் பார்வையிடலாம். கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள விபத்தில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 800-679-8215 என்ற எண்ணில் நேரடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

