தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின பவளவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி பள்ளி வளாகத்தில் சுதந்திர தின கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பார்வைக்கு வைத்தார். இந்த கண்காட்சியில் இந்தியாவின் வரைபடம் பசுமை போர்த்தி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு காளைகள் பூட்டிய வண்டியும் ,தாமரையில் தேசியக் கொடியும் ,இரண்டு அன்னப்பச்சிகள் வழியாக தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சியும், உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினரை, ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்சன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போலப்பன் , ஆசிரியைகள், மாணவ மாணவிகள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ் திமுக நகரச் செயலாளர் பூஞ்சோலை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்கள் சுதந்திர தின விழா ஜோதியினை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பாரதமாதா வேடமணிந்த மாணவி தேசிய கொடியை சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கினார்.