மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
துபாயில் இருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை சோதனை செய்ததில் பெட்டிக்குள் தலா 1 கிலோ எடை கொண்ட 5 தங்க கட்டிகளை கருப்பு டேப் மூலம் ஒட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து தலா 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 44 லட்சத்து, 44 ஆயிரத்து 462 ஆகும். மேலும் தங்கம் கடத்தி வந்த நபரிடம் யாராவது கமிஷன் கொடுப்பதாக கூறி தங்கத்தை கொடுத்தனுப்பினரா அல்லது அவரே கடத்தி வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் ஒரே நாளில் 5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.