அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு சீட் கேட்டு 50-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடும் போட்டி நிலவுவதால் அ.தி.மு.க.வின் 27 பேர் குழு இன்று மாலை கூடுகிறது
தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற 29-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
புதிய 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 31-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது.இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு சீட் கேட்டு 50-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் செம்மலை, ஜெயக்குமார், பொன்னையன், கோகுல இந்திரா, இன்பதுரை, தேனி சையதுகான் ஆகியோர் எம்.பி. பதவியை பெற கடும் முயற்சி செய்து வருகின்றனர். இதில் தேனி சையதுகானுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து வருகிறார். செம்மலைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு உள்ளது. இன்பதுரைக்கு எஸ்.பி.வேலுமணி சிபாரிசு செய்கிறார்.
இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை கூட்டி விவாதிக்க தலைமை முடிவு செய்தது.இப்போது திடீரென வழிகாட்டுதல் குழுவுடன் மூத்த அமைப்புச் செயலாளர்களையும் சேர்த்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மொத்தம் 27 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இவர்கள் கூடி டெல்லி மேல்சபை (ராஜ்யசபா) வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்ய உள்ளார்கள்.