• Sat. Feb 15th, 2025

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு…

ByKalamegam Viswanathan

Aug 18, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட்ராஜா (49). இவரது மனைவி மெர்லின் (44), மகள் ரோஷினி (15), மகன் ரோகித் (13). ரிச்சர்ட்ராஜா தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்கள் வந்த தொடர் விடுமுறையில் திசையன்விளையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ரிச்சர்ட்ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு காரில் வந்திருந்தார். நேற்று நள்ளிரவு மீண்டும் கோயம்புத்தூருக்கு அவர்கள் அனைவரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர். இன்று காலை, சாத்தூர் அருகேயுள்ள நல்லி சத்திரம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ரோகித், இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த ரிச்சர்ட்ராஜா, இவரது உறவினர் ஜான்சன், மெர்லின், ரோஷினி ஆகியோரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மெர்லினும், ரோஷினியும் பரிதாபமாக உயிரிழந்தனர். ரிச்சர்ட்ராஜா, ஜான்சன் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை விபத்தில் தாய், 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.