

அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர் கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க வந்தது போல வந்த நபர், திடீரென துப்பாக்கியால் சுட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று மாலை சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனால் மர்மபர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றானது. ,இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தப்பியோடிய கொலையாளியைத் தேடி வருகின்றர். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

