• Mon. Apr 21st, 2025

அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநராக இந்தியர் நியமனம்

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார். இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை கடந்த ஆண்டு டிசம்பரில் நியமித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று வெளியான அறிவிப்பில் காஷ் படேல் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் தீவிர ஆதரவாளரான காஷ் படேல், 1980-ம் ஆண்டு நியூயார்க்கில், கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து குடியேறிய இந்திய பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். காஷ் படேல் லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு படித்துள்ளார். ட்ரம்பின் முதல் அதிபர் பதவி காலத்தில் காஷ் படேல் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.