• Thu. Oct 10th, 2024

2022 ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தயாராகும் காளைகள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் தைப்பொங்கல் முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியிலும் பல்லவராயன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.


திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி, கொசவபட்டி, மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர்.


மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளைகளுக்கு உணவில் தொடங்கி பயிற்சி வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது காளைகள், காலை எடுக்கும் வேகம்தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடுவதற்கு உதவும், இதற்கு காளைகளுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி அவசியம். இதனால் காளைகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி அளிப்பதாகவும்.

அதுமட்டுமின்றி தினமும் நடைப்பயிற்சியும் அளித்து வருவதாகவும். கூட்டமான மாடுபிடி வீரர்களை கண்டு மிரளாமல் இருக்க வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, கும்பலாக ஆட்களை நிறுத்தி காளைகள் தாவி ஓட பயிற்சி அளித்து வருவதாகவும். காளையின் திமிலை பிடித்து அடக்க வரும் வீரர்களிடம் இருந்து உடலை லாவகமாகத் திருப்பி தப்பிக்க மண்ணை குத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காளைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் முக்கியமானவையாக. பச்சரிசி, தேங்காய், பேரிச்சம்பழ கலவையும், உளுந்து மற்றும் பருத்தி கலவையும் உணவாக கொடுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு தயார்படுத்தி வருவதாக காளை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *