மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 88 மாணவ மாணவியர் இதில் தேர்ச்சி பெற்றனர். இதில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பி.ஆர்.பிரியங்கா 720 மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஏ.ஹரிஷ்குமார் 373 மதிப்பெண் கள் பெற்று இரண்டாமிடமும், மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஆஷிகா ராணி 353 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 288 பேரில், 88 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தகுதித் தேர்வில் வென்ற 17 மாணவ மாணவியர் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் எம்பிபிஎஸ் படிப்புக்கும் 3 பேர் பல் மருத்துவ படிப்புக்கும் தேர்வாகியுள்ளனர்.