• Sat. Feb 15th, 2025

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் பலி-வதந்தியால் நடந்த துயர சம்பவம்

ByIyamadurai

Jan 23, 2025

ரயிலில் தீ பிடித்தது என்ற வதந்தியை நம்பி இறங்கி ஓடிய 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் ரயிலில் புகை வருவதை பார்த்து பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி, தப்பிக்க முயன்ற போது எதிர்புறம் இருந்து வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சுமார் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே நடைபெற்றுள்ளது .

இந்த விபத்து எப்படி நடைபெற்றது என அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பொதுப் பெட்டியில் (முன்பதிவில்லா) பயணித்த பயணிகள் தான். ரயிலை நிறுத்த யாரோ ஒருவர் ரயில் பெட்டியில் உள்ள அவசரகால சங்கிலியை இழுத்துள்ளனர். இதனால் அவசரகால பிரேக் ரயிலில் பயன்படுத்தப்பட்டு ரயில் சட்டென நிறுத்தப்பட்டது.

அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்து பார்த்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பயணிகள் மீது அதே வேகத்தில் மோதியது. இதன் விளைவாகவே இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது.” என்றார்.

விபத்து குறித்து ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கூறுகையில், ” புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்ததில் 9 பேர் ஆண்களும், 3 பேர் பெண்களும் அடங்குவர். அவர்களில் 3 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள். நேபாள குடிமக்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்த 10 பேரில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.” என்றார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.