நாடாளுமன்றத்தில் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி கனிமொழி உட்பட 11 பேர் சஸ்பெண்ட்
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து, சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத் தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் 5 பேர் உட்பட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்படி, கனிமொழி, என்.வி.என்.சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, கிரிராஜன், சுஷ்மிதா தேவ், டோலாசென் உட்பட 11 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.