• Fri. Apr 26th, 2024

கஞ்சா விற்றால் 10 வருடம் சிறை தண்டனை – மு.க.ஸ்டாலின் பேச்சு

ByA.Tamilselvan

May 10, 2022

குட்கா,கஞ்சாபோன்ற போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியபோது போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, இக்குற்றங்களில் ஈடுபடுவோர், அவர்களது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க 256 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் “போதைத் தடுப்பு கிளப்” அமைக்க ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கல்வி நிறுவனங்கள் இருக்கக்கூடிய 200 மீட்டர் தொலைவிற்குள் போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடைச் சட்டம், 1985ல் உரிய திருத்தங்கள் செய்யத் தேவையான கருத்துருக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது ஒப்புதல் பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என்ற உறுதியை இந்த அவைக்குத் தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *