• Fri. Mar 29th, 2024

வன்னியர்களுக்கான 10.5சதவீத உள் ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Byவிஷா

Nov 1, 2021

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 10.5சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதமும் 68 சமூகத்தை கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 சதவீதமும் ஒதுக்கப்படுவதால், மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதால் 40 சமூகங்களை சேர்ந்த மக்களின் கல்வி வேலைவாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.


சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்கி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அவர், வன்னியர் சமூகத்தினருக்கும் வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். பாலமுரளி மட்டுமல்லாது 20க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையுடன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்குகளை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி துரைசாமி, முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு அரசு தரப்பில் விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *