தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : பொருளாதார தடைக்கற்களால், மாணவர்களின் முறையான கல்வி தடைபடலாம்; அர்த்தமுள்ள, வளமான எதிர்காலப் பணிகளைப் பெறுவதிலும் பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையால், குறைவான கல்வியும், அதனால் எதிர்காலத்தில் குறைவான வருவாயும், சிரமமான வாழ்நிலையும் கூட நமது சமுதாயத்தில் ஏற்படலாம்.
தூத்துக்குடி மாணவர்கள், பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக, இன்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், ‘கடலோரப் பகுதி மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஏற்கெனவே உள்ள தாமிர வித்யாலயா பள்ளி மற்றும் உதவித் தொகைத் திட்டத்தின் தொடர்ச்சியாகும். இந்த இரண்டாம் கட்டத்துக்கான தொடக்கவிழா நிகழ்ச்சியில், கடலோர சமுதாயங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு 5.45 லட்ச ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு அம்மாணவர்களின் பெற்றோரும் அழைக்கப்பட்டனர்.
1 முதல் 5வது வகுப்பு வரை ரூ.4000, 6முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.6000, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 7000, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.9000 நிதியுதவி வழங்கப்பட்டது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்கிய முதல் கட்ட உதவித் தொகையைப் பெற்று, 7,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த இரண்டாம் கட்ட உதவித் தொகை திட்டத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், இந்தக் கல்வியாண்டில், தூத்துக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் 7,000 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக்குத் தேவையான நிதி உதவியை வழங்க, ஸ்டெர்லைட் காப்பர் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டன, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன, பள்ளிகளின் உள்கட்டுமானங்கள் மேம்படுத்தப்பட்டன. மற்றொரு புதுமையான முயற்சி தான் தாமிர வித்யாலயா என்பது. இது, தூத்துக்குடி மாணவர்களுக்குத் தேவைப்படும் புதுமையான ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகும்.