

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.
பாடியவர் : ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: நெய்தல்
பொருள்:
திருமணம் செய்துகொள்ள வந்துகொண்டிருக்கும் தலைவனைக் காணச் செல்லலாம் என்று தோழி தலைவியை அழைக்கிறாள். பெரிய அலைகள் மோதப் பின்னிக் கிடக்கும் வேர்களையும், அரம் போன்ற முள்வாய் கொண்ட மடல்களையும்
கொண்டிருக்கும் தாழம்பூக்களும், பொன்னைப் போல் பூந்தாதுகளைக் கொட்டும் புன்னைப் பூக்களும் மணக்கும் பல பூக்களைக் கொண்ட கானல் பூங்காவில் பகலில் வந்து, ஏக்கம் கொண்டு உடல் அழகு தேயும்படி அவன் சென்றனன் என்றாலும், இன்று திருமணம் செய்துகொள்ள வருகின்றான். தன் மார்பு மாலையில் வண்டுகள் மொய்க்க வருகின்றான். மணி கட்டிய குதிரைமேல் வருகின்றான். நீண்ட நீர்நிலத் தலைவன் வருகின்றான். அவனைக் குவிந்திருக்கும் மணற்குன்றில் ஏறி நின்று கண்டுவரலாம். சென்றுவரலாமா என தோழி தலைவியை அழைக்கிறாள்.