• Tue. Apr 30th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 23, 2023

நற்றிணைப் பாடல் 236:

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ‘பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை, இனி – வாழி, தோழி! – புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.

பாடியவர் : நம்பி குட்டுவன்
திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! நீ வாழ்வாயாக! எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று “அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள்” என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *