தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடங்கியுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்றால் பல குடும்பங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை மற்றும் வேலை இழப்புகளால், கடந்த ஓராண்டில், எண்ணற்ற இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பைத் தேடுவது அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, உலக திறன்மேம்பாட்டு நாளில், ஸ்டெர்லைட் ஆலை, தாமிர முத்துக்கள் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதற்காக, ஒரு மையத்தைத் தொடங்கியுள்ளது.
கல்வியும் திறன் மேம்பாடும் அனைவரும் கிடைக்கவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இயங்கும் வேதாந்தா அறக்கட்டளை சார்பாக இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தரும் வகையில் அமையும் பயிற்சிகளில் கவனம் செலுத்தும் இந்த மையம், அவர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது, 1992 முதலே, திறன் மேம்பாட்டு மையங்களின் மூலம், வேதாந்தா அறக்கட்டளை, வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
நாடெங்கும் உள்ள 180 வேதாந்தா ரோஜ்கர் மையங்களின் மூலம், 12 லட்சம் இளைஞர்களுக்கு இந்த அமைப்புகள் பயிற்சி வழங்கியுள்ளது. 2021 – 21 நிதியாண்டில், 101 புதிய மையங்களைத் தொடங்கும் திட்டத்தின் ஆரம்பமாக, இதன் முதல் பயிற்சி மையம், தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உதவியோடு இன்று தொடங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் இந்த அறக்கட்டளைக்கு உள்ள ஆழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தூத்துக்குடி இளைஞர்களுக்குத் தேவைப்படும் புதிய வாய்ப்புகளை, இந்த மையம் அளிக்கும்.
முதலில் ஐந்து விதமான துறைகளில், தூத்துக்குடி மையம் பயிற்சி வழங்கத் தொடங்கும். தையல் இயந்திர பயிற்சி, வெல்டிங், பொதுவான மின்சாரத் தேர்ச்சி, சரக்குப் போக்குவரத்து வினியோகம், உணவுப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் அமைந்துள்ள இப்பயிற்சிகள் இவை. தேசிய திறன் மேம்பாட்டு கழகம் நடத்திய மதிப்பீட்டுன் இறுதியிலேயே இத்துறைகளில் பயிற்சி தேவை என்பது தெரியவந்தது.ஒவ்வொரு துறையிலும் 300 முதல் 400 மணிநேர பயிற்சி வழங்கப்படும். சமுதாயத்தின் தேவையை ஒட்டி, மேலும் பல புதிய துறைகளில் பயிற்சிகள் விரிவாக்கப்படும்.
அனைத்துப் பயிற்சிகளும், முறையான தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படுவதோடு, அவை இணையம் வழியாகவும் நேரடியாகவும் நடத்தப்படும். முதற்கட்டமாக 600 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், அதனை பின்னர் 1500 இளைஞர்களுக்கு விரிவுபடுத்தும். மேலும், பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைகள் கிடைப்பதற்கும் இந்நிறுவனம் அனைத்து முயற்சியையும் மேற்கொள்ளும். குறைந்தபட்சம் 70 சதவீத மாணவர்களுக்காவது வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சியை ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொள்ளும். இந்தப் பயிற்சிகளை வேதாந்தா அறக்கட்டளை, பிர்லா எடுடெக் லிமிடெடுடன்(பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பங்காளர்) இணைந்து வழங்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஏ.சுமதி, “நமது சமுதாயங்களின் எதிர்காலம், இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. கடுமையாக உழைப்பதிலும் பெரிதாக கனவு காணுவதிலும் அவர்களுக்கு உள்ள எல்லையற்ற திறன், இந்தப் பயிற்சித் திட்டங்களின் மூலம் கூர்மைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். அதன்மூலம் அனைத்துச் சமுதாயங்களிலும் ஒருமித்த வளர்ச்சி ஏற்படும் என்றே கருதுகிறேன்.” என்றார்
தையல் பயிற்சிக்கு பதிவுசெய்துகொண்டுள்ள சங்கரபேரி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் கூறுகையில், “பயிற்சி பெறுவதற்காக நான் காத்திருக்கிறேன். இதனைத் தீவிரமாக கற்றுக்கொண்டு, முறையாக நிறைவுசெய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் ஆன முழு முயற்சியை நான் வழங்குவேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஸ்டெர்லைட்டுக்கு என் நன்றி.” என்றார்
ராஜன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, முகிலா தேவியும், தையல் பயிற்சியில் சேர்ந்துள்ளார். “கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருவாய் ஈட்டுவதற்குச் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில், இத்தகைய பயிற்சியை வழங்க முன்வந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் எண்ணம் அற்புதமானது. முழுமையாக நேரம் செலவு செய்து, தொழில் பயிற்சி பெற விரும்பும் அனைவருக்கும் இந்தத் திட்டம் உதவும்,” என்று தெரிவித்தார் முகிலா தேவி.
இளைஞர்கள் மத்தியில் நேர்மறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ஏற்கெனவே தாமிர முத்துகள் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தூத்துக்குடியில் செயல்படுத்தி வருகிறது. மேலே சொன்ன ஐந்து பயிற்சி வகுப்புகளும், இதன் தொடர்ச்சியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, உள்ளூர் இளைஞர்கள் கடல்சார் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உதவி செய்ததோடு, முன்னிலை வகித்த மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கி, பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.