குவைத்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்க வலியுறுத்தியும் 14 வயது சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
காரைக்குடி அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில், இவரது மனைவி சித்ரா (46), மகள் கீர்த்தனா (14) இருவரும் வறுமையில் சிரமப்பட்டனர். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனாவை தனது தாயார் அழகம்மாளிடம் விட்டுவிட்டு உறவினர் உதவியால் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சித்ரா சென்றார்.
அங்கு சம்பாரித்த பணத்தை அவ்வப்போது வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால் சில மாதங்களாக வீட்டு உரிமையாளர் சித்ராவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வருகிறாராம். மேலும் தனது மகளிடம் பேசவிடாமல் தடுத்து வருகிறாராம். இதுகுறித்து சித்ராவோடு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கீர்த்தனாவிற்கு மொபைலில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது தாயாரை மீட்டு ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கீர்த்தனா தனது பாட்டியுடன் வந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
குவைத்தில் வேலைக்கு சென்ற தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை – மீட்க கோரி 14 வயது சிறுமி ஆட்சியரிடம் மனு..
