• Thu. Mar 28th, 2024

உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள்!..

By

Aug 15, 2021

உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் வன்முறையின் நிழலில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறும்போது, தாலிபன்கள் மிக வேகமாக நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். கடுமையான சண்டை மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் நாட்டின் பாதிப் பகுதியை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.


1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு தலிபான்களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுபாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.


ஆப்கானை தாலிபான்கள் ஆண்ட காலத்தில் பெண்கள் வீட்டில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் உறுப்பினர் உடன் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று தாலிபன்கள் உத்தரவிட்டிருக்கின்றனர் என்றும் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை தாலிபன்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் தாலிபன் இயக்கம் மறுத்திருக்கிறது. தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


‘தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முடிவுகட்டிவிடுவார்கள்” என்று நாடாளுமன்ற பெண் உறுப்பினரான ஃபர்சானா கோச்சாய் கூறியிருந்த நிலையில் மீண்டும் ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *