• Fri. Mar 29th, 2024

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள்!…

By

Aug 16, 2021

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாடு மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றிய தலிபான்கள் இறுதியாக தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தலிபான்களின் கை ஓங்கியதை அடுத்து அதிகாரத்தை அவர்களுக்கே விட்டுத்தர அதிபர் அஷ்ரப் கனி ஒத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேறிவிட்டார். இதனையடுத்து காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பான காட்சிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 20 ஆண்டு்களுக்கு முன்னர் தாங்கள் காபூலை விட்டு வெளியேறியதைப்போல் அல்லாமல் தற்போது வித்தியாசமான நகரமாக இருப்பதாக தலிபான் படையினர் கூறியதை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பழமைவாத தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால், ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து உடைமைகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானை ஓட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏராளமானோர் காத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாப்பாக மீட்க அதிபர் பைடன் ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியுள்ளார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில ஹெலிகாப்டர்கள் வந்த நிலையில் அதில் ஏறி அதிகாரிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர். அங்கிருந்த அமெரிக்க கொடியும் அகற்றப்பட்டுவிட்டது.

வெளியே செல்லும் முன் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அமெரிக்க அதிகாரிகள் எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ஆப்கன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை தலைமை தாங்கி நடத்திவரும் இந்தியாவின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. நார்வே மற்றும் எஸ்டோனியா ஆகிய இரு நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ், உறுப்பு நாடுகளுக்கு சுருக்கமாக விளக்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *