தேனி மாவட்டம் தேவாரத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் நாடார் வடக்குத் தெரு, நந்தவனத் தெரு பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட நபரின் தலை, பின்கழுத்து மற்றும் வலது காதுக்கு மேல் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததுடன், முகமும் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த நந்தகோபால் – முருகேஸ்வரி தம்பதியினரின் மகன் விவேக் (35) என்பது தெரியவந்தது.
திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த விவேக், வாடகை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து விவேக்கின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விவேக் தேவாரம் பகுதிக்கு வந்ததற்கான காரணம் என்ன? அவரைக் கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேவாரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


