• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு ‘திறல் 2026’ தொடக்கம்..,

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) கோவை கிளை மற்றும் சிகாசா சார்பில், சி.ஏ. மாணவர்களுக்கான இரண்டு நாள் தேசிய அளவிலான மாநாடு ‘திறல் 2026’ இன்று தொடங்கியது. நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் ஐசிஏஐ முன்னாள் தேசியத் தலைவர் ஜி. ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கணக்கியல் துறை முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சி.ஏ. மாணவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், பொறுப்புகளும் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐசிஏஐ கோவை கிளைத் தலைவர் சர்வஜித் எஸ். கிருஷ்ணன் பேசுகையில், 2010-ம் ஆண்டு முதல் கொரோனா காலகட்டத்தைத் தவிர்த்து தொடர்ந்து நடத்தப்படும் இம்மாநாடு தற்போது 13-வது முறையாக நடைபெறுகிறது. கோவையில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்களும், 9,000-க்கும் அதிகமான சி.ஏ. மாணவர்களும் உள்ளனர். மாணவர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.

மாநாட்டில் புதிய வருமான வரிச் சட்டம் 2025, ஜி.எஸ்.டி., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடிகள் மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்கள் குறித்து வல்லுநர்கள் கலந்துரையாட உள்ளனர். மேலும், மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்புகள் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகளும் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாளில் ஜி.எஸ்.டி. தொடர்பான வழக்குக் கள ஆய்வுகள், மனநலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த அமர்வுகள் நடைபெற உள்ளன. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கே. அண்ணாமலை ‘ஆன்மிகமும் வெற்றியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். நிறைவு விழாவில் ஐசிஏஐ நிர்வாகிகள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.