• Fri. Apr 18th, 2025

ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது..,

ByPrabhu Sekar

Apr 9, 2025

சென்னை ஆலந்தூர் ஆதம்பாக்கம் பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறி வைத்து ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புனித தோமையார் மலை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தகவலின் அடிப்படையில் துணை ஆணையர் உத்தரவின் பேரில் ஆலந்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து ரயில் நிலையங்கள்,கல்லூரி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையில் சோதனை செய்துள்ளனர்,

அப்போது அவர் கைப்பையில் ஹெராயன் வகை போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளைஞரை மீனம்பாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன்(25) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் அசாமில் இருந்து ரயில் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருளை சென்னைக்கு கடத்தி வந்து ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து நிஜாமுதீன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நிஜாமுதீனிடமிருந்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புடைய 13 கிராம் ஹெராயன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.