


மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.9 கோடி மதிப்புடைய, கொக்கையின் மற்றும் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதை பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜாம்பியா நாட்டு இளம் பெண் உள்ளாடை மற்றும் வயிற்றுக்குள் விழுங்கிக் கொண்டு வந்த கொக்கையின் போதை பொருள், சென்னையைச் சேர்ந்த இளைஞர் உடமைக்குள் மறைத்து எடுத்து வந்த பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா ஆகியவற்றை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் ஒருவர், மேற்கு ஆப்பிரிக்க நாடான சேனைகல் நகரில் இருந்து, துபாய் வழியாக சென்னைக்கு, சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்திருந்தார்.

அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து பெண் சுங்க அதிகாரிகள், அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகள் கலைந்து முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்தப் பெண்ணின் உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
அந்தப் பார்சலில் 460 கிராம் கொக்கையின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின்பும் அந்தப் பெண்ணின் வயிறு அளவு அதிகமாக பெரிதாக இருந்ததை, பெண் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதை அடுத்து அந்தப் பெண்ணை, சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது. அவருடைய வயிற்றுக்குள் பெரிய கேப்சல்கள் விழுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவக் குழுவினர் வயிற்றுக்குள் இருந்த கேப்சல்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தனர். மொத்தம் 12 கேப்சல்கள் இருந்தன. இவைகளில் 150 கிராம் கொக்கையின் போதைப்பொருள் இருந்தது. மொத்தம் அந்த ஜாம்பியா நாட்டு இளம் பெண் இடம் இருந்து,610 கிராம் கொக்கையின் போதை பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.6.1 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், ஜாம்பியா நாட்டு இளம்பெண்ணை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. எனவே சென்னையில் இவர் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க எடுத்து வந்தார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். இப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதோடு அவருடைய உடமைகளையும் சோதனை நடத்தினர்.
மேலும் போதைப் பொருளை கண்டுபிடிக்கக்கூடிய, சுங்கத்துறை மோப்ப நாயை வைத்து, அந்த ஆண் பயணியின் உடைமைகளை சோதித்த போது, அந்தப் பயணியின் உடமைகளில் போதைப்பொருள் இருப்பதை, மோப்ப நாய் உறுதி செய்தது.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவருடைய உடமைகளை திறந்து பார்த்து சோதித்த போது, அதனுள் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவருடைய உடைமைகளில் இருந்து 1.816 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் ரூ.1.9 கோடி. இதை அடுத்து அந்த ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், ரூ.9 கோடி மதிப்புடைய கொக்கையின் போதை பொருள், உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஜாம்பியா நாட்டு இளம் பெண், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு, சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.9 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜாம்பியா நாட்டு இளம் பெண், சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

