• Fri. Mar 31st, 2023

ரைட்டர்-சிறப்பு பார்வை

தயாரிப்பு: நீலம் புரடக்க்ஷன்ஸ்
இயக்கம் – பிராங்க்ளின் ஜேக்கப்
இசை – கோவிந்த் வசந்தா
நடிப்பு – சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன்

காவல் துறையை மையப்படுத்தி, காவல்துறையின் அத்துமீறல், அராஜகம் பற்றிபல திரைப்படங்கள் வந்துள்ளது. இந்த ‘ரைட்டர்’ படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை தமிழ் சினிமாவிற்கு புதியது அரசியல் இல்லாமல் காவல்துறை நிர்வாகமும், அதிகாரிகளும் இயங்க மாட்டார்கள் ஆனால் இதில் அதிகாரியின் அத்துமீறல் அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகள் அதனை தடுக்க முடியாமலும், சம்பந்தபட்டவர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் ரைட்டர் கதாபாத்திரத்தை வைத்து திரைக்கதை பயணிக்கிறது

யதார்த்தமும், சினிமாத்தனமும் கலந்துபடத்தை இயக்கி உள்ளார்பிராங்க்ளின். அதுவே படத்திற்கான முழு பாராட்டுக்களையும் பெற முடியாத அளவிற்கு தடைகல்லாகவும் இருக்கிறது
படத்தின் ஒரு கட்டத்தில் படம் இப்படி முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க சமரசமில்லாமல்இயல்பாக படம் முடிகிறது

ஒரு படத்தில் ரசிகர்களின் அனுதாபத்தை அதிக அளவில் பெறும் ஒரு கதாபாத்திரத்திற்கோ, நாயகனுக்கோ கடைசியில் நல்லதே நடக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு வரும் போது அதை இயல்பாக இயக்குனர் கொண்டு போனது யதார்த்த சினிமாவை விரும்பும் ரசிகனுக்கானது

சமுத்திரக்கனி, காவல் துறையினருக்கு சங்கம் வேண்டும் என நினைக்கும் ஒரு ரைட்டர். அந்தப் பிரச்சினையின் காரணமாக அவர் வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார். அங்கு அவருக்கு சீனியருக்குரிய மரியாதை தராமல் ‘பாரா’ டூட்டி போட்டுவிடுகிறார்கள். டி.சி உத்தரவின் பேரில் பி.ஹெச்டி படிக்கும் மாணவரான ஹரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைக்கிறார் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர். அவர் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக ‘யுஎபிஏ’ வழக்கு போடுகிறார்கள். ஹரிக்கு சமுத்திரக்கனி உதவ நினைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

‘ரைட்டர்’ சமுத்திரக்கனி பற்றிய படம் என எதிர்பார்த்தால், அப்பாவி கைதியாக சிக்கும் ஹரி பற்றிய படமாகவும் இந்தப் படம் இருக்கிறது. ஒருவரை மையப்படுத்தி கதை நகர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் படத்தில் மையக் கதாபாத்திரமாக ஹரி கதாபாத்திரம்தான்மாறுகிறது. பின் இனியா கதாபாத்திரம் மீதும் அனுதாபம் வருகிறது. ஹரியின் அண்ணன் கதாபாத்திரம் சுப்பிரமணிய சிவா மீதும் வருகிறது. மையப் புள்ளியை விட்டு திரைக்கதை கிளைக்கதைகளில் பயணிப்பது சோர்வை ஏற்படுத்துகிறது.


இந்த வருடத்தில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன் மீது இருந்த கருத்துக் கந்தசாமி இமேஜை சமுத்திரக்கனி’ முற்றிலும் மாற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. ரைட்டர் தங்கராஜாக அப்படியே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதிலும் மேலதிகாரி அவரைத் திட்டி, அடித்து அவமானப்படுத்தும் போது அதைக் கண்டு வெதும்பி உருகும் காட்சிகளில் அடடா சொல்ல வைக்கிறார். அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் எதுவுமே நடக்காதது போல அப்படியே மற்றவர்களிடம் பேசி சமாளிக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் தனது யதார்த்த நடிப்பைப் பதிவு செய்கிறார். அது சரி, அவருக்கு இரண்டு மனைவிகள் என்பது படத்திற்கு எந்த விதத்தில் உதவுகிறது.


படத்தின் மற்றொரு கதாநாயகன் ஹரிகிருஷ்ணன் அன்புதுரை. இவரை ‘மெட்ராஸ்’ பட ஜானி என்று சொன்னால்தான் ரசிகர்களுக்குத் தெரியும். அப்பாவி கல்லூரி மாணவராக காட்சிக்குக் காட்சி நெகிழ வைக்கிறார். இப்படி பல அப்பாவி மாணவர்கள் போலீஸ் பிடியில் சிக்கி தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஹரிக்கு எதுவுமே நடக்கக் கூடாது என ரசிகர்கள் காத்திருக்க நம்மை ஏமாற்றிவிடுகிறார் இயக்குனர். ஏன் சார் ? ஏன் ?.


படத்தில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. சமுத்திரக்கனி இரண்டாவது மனைவியாக மகேஸ்வரி. பிளாஷ்பேக்கில் குதிரை ரைடர் ஆக ஆசைப்பட்டு மேலதிகாரின் சாதி திமிரால் உயிரை விடும் பெண் போலீஸ் ஆக இனியா.படத்தில் கலகலப்பான வசனங்களைப் பேசி ஆங்காங்கே கைத்தட்டல் பெறுபவர் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி. ஹரியின் அண்ணனாக சுப்பிரமணிய சிவா, தம்பி மீது அதிக பாசம் வைத்துள்ள அப்பாவி அண்ணனாக கலங்க வைக்கிறார்.இன்ஸ்பெக்டர் ஆக கவிதாபாரதி, டி.சி ஆக கவின் ஜெய் பாபு.

இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் போலீஸ் துறையில் இருக்கும் சில அதிகார துஷ்பிரயோகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.கோவிந்த் வசந்தா பின்னணி இசையும், பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவும், மணிகண்டன் சிவகுமார் படத் தொகுப்பும், ராஜாவின் அரங்க அமைப்பும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.திரைக்கதை சில இடங்களில் தடம் மாறி போவதை சரி செய்திருந்தால் இந்த ‘ரைட்டர்’ இன்னும் அழுத்தமாய் தடம் பதித்திருக்கும்.

ரைட்டர் – அரசியல் தலையீட்டை கூறாதஅதிகாரத்தின் ஆணவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *